அமமுக வேட்பாளராக களம் இறங்குகிறார் சேகர் ரெட்டி கூட்டாளி திண்டுக்கல் ரத்தினம்?

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக சேகர் ரெட்டி கூட்டாளியான திண்டுக்கல் ரத்தினம் போட்டியிடக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திமுகவில் வலுவான வேட்பாளர் இல்லை. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கலாம் என கூறப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் திண்டுக்கல் சீனிவாசனும் நத்தம் விஸ்வநாதனும் உள்ளடி வேலை பார்ப்பது உறுதி என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் தினகரனின் அமமுக, பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து முடித்த கையோடு வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது. அமமுகவில் ஒட்டன்சத்திரம் திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணியின் உறவினர் ஒருவர் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் போன்ற பெரும் தலை களம் இறங்கும் நிலையில் சர்ச்சைக்குரிய தொழிலதிபரான சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் ரத்தினம் வேட்பாளராக களம் இறங்கக் கூடும் என அமமுகவில் பேச்சு அடிபடுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினம், மாஜி தலைமைச் செயலர் ராமமோகன ராவ், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவர். சேகர் ரெட்டி சிறைக்குப் போன போது திண்டுக்கல் ரத்தினமும் சிறைவாசம் அனுபவித்தார்.

மணல் அள்ளுவதில் கோலோச்சிக் கொண்டிருந்த கோவை ஆறுமுகசாமியின் தொழிலையே நாசமாக்கி தம் வசமாக்கிக் கொண்ட திண்டுக்கல் ரத்தினம், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் என கொடிகட்டிப் பறக்கிறார். திண்டுக்கல்லில் தொழில் நடத்தும் நகைச்சுவை நடிகரும் இவரின் கூட்டாளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>