கர்நாடக காங்.எம்எல்ஏ திடீர் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு மீண்டும் நெருக்கடி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது.

பதவியேற்ற நாள் முதலே குமாரசாமி அரசுக்கு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களாலும், எதிர்க் கட்சியான பாஜகவாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ராஜினாமா செய்ய வைக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை கடத்திச் சென்று மும்பையில் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த கர்நாடக அரசு கவிழ்ப்பு முயற்சி மீண்டும் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த சிங்கோலி தொகுதி எம்எல்ஏவான உமேஷ் ஜாதவ் இன்று கர்நாடக சபாநாயகரிடம் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் கொடுத்தார்.

ராஜினாமாவுக்கான காரணம் எதுவும் உமேஷ் ஜாதவ் தெரிவிக்கவில்லை என்றாலும் கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News >>