ஏழைகளுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்க தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி
தமிழக அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் பழனிச்சாமி இன்று அத்திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தேர்தல் நேரத்தில் ரூ 2000 தொகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,இத்திட்டத்தில் உண்மையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் கூறி இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தினேஷ்பாபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஊரகப் பகுதியில் 41 லட்சத்து 70 ஆயிரம் பேரும், நகர்ப் பகுதியில் 15 லட்சம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்படியே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.