10 தொகுதிகளுக்கும் சிதம்பரம்தான் பொறுப்பு! கைபிசையும் கோஷ்டிகள்
திமுக கூட்டணியில் பாண்டிச்சேரியோடு சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பை சிதம்பரத்திடம் ஒப்படைத்துவிட்டார் ராகுல்காந்தி.
திருநாவுக்கரசர் மாற்றத்தின் பின்னணியிலும் சிதம்பரத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. புதிய தலைவர் யார் என காங்கிரஸ் வட்டாரமே எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, தன்னுடைய விசுவாசியான கடலூர் அழகிரியை அந்தப் பதவியில் கொண்டு வந்து நிரப்பினார். இதனால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் வேண்டும் என்றால் சிதம்பரம் நினைத்தால்தான் முடியும் என்பதால் அவரது எதிர்க்கோஷ்டியினர் செய்வது அறியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசும் கதர்க்கட்சி கோஷ்டிகள், தமிழகக் கட்சிகளிலேயே அதிகப்படியான கோஷ்டிகள் நிறைந்திருப்பது காங்கிரஸ் கட்சியின்தான்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன், சிதம்பரம், கிருஷ்ணசாமி, தங்கபாலு என ஆளுக்கொரு கோஷ்டிகள் செயல்படுகின்றன. திமுக ஒதுக்கிய 10 இடங்களுக்கும் தலைவர்களே போட்டி போட நிற்கிறார்கள். மாவட்டத் தலைவர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா எனத் தெரியவில்லை. 10 தொகுதிகளுக்குமான செலவையும் சிதம்பரமே ஏற்றுக் கொள்ள இருப்பதால், அவரிடம் போய் எப்படி நிற்பது எனவும் மாவட்டத் தலைவர்கள் யோசிக்கிறார்கள். ஏனென்றால், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திருநாவுக்கரசர் நியமித்தவர்களே தலைவர்களாக தொடர்கிறார்கள். தேர்தல் சீட் கொடுக்கும் சமயத்தில் சத்யமூர்த்திபவன் கலவரம் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.