காஞ்சிபுரத்தில் செல்வப் பெருந்தகை? சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுக்கும் நிர்வாகிகள்
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய நாள் முதலாக ப.சிதம்பரத்தின் தீவிர விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார் செல்வப் பெருந்தகை.
இந்தமுறை எப்படியாவது டெல்லி சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதனும் சீட் கேட்டிருக்கிறார். இதில் செல்வத்துக்கே ஜாக்பாட் என்கிறார்கள் காஞ்சி காங்கிரஸ் புள்ளிகள்.
இந்தச் சண்டையால் காஞ்சிபுரம் கைநழுவிப் போனால் மதிமுக பக்கம் வந்து விழ வேண்டும் என தாயகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தோல்விக்குப் பிரதான காரணமாக மல்லை சத்யா வாங்கிய வாக்குகள் அமைந்தன. இந்தமுறை திமுக அணி சார்பாக நின்றால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவோம் என உறுதியாக நம்புகிறார்.
காங்கிரஸ், மதிமுக சண்டைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, உதயசூரியனுக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என திமுக மாசெ அன்பரசன் உள்ளிட்டவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு உதாரணமாக சில விஷயங்களைச் சொல்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள தொழில் பட்டறை அதிபர்கள் எல்லாம் அவர்களுக்குத்தான் நிதி கொடுக்கின்றனர். நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
உதயசூரியன் நின்றால்தான் கட்சி நிதியும் வந்து சேரும் எனக் கணக்கு போடுகின்றனர். யாருக்கு காஞ்சி என்ற கேள்விக்கு இன்னும் ஓரிரு தினங்களில் விடை கிடைத்துவிடும்.