அனுராதாவைக் களமிறக்கும் தினகரன்? அமமுக தேர்தல் வியூகம்
மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இதற்காக 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்துவிட்டார். தற்போது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்.
பூத் கமிட்டிப் பணிகள் ஏறக்குறைய 75 சதவீதம் நிறைவடைந்துவிட்டது எனப் பேசும் அமமுக பொறுப்பாளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கான நபர்களைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார். வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான அளவுக்கு வாக்குகளை எடுத்து, அதிமுகவின் தோல்வியை உலகுக்குச் சொல்வதுதான் அவருடைய இலக்கு.
தென்மண்டலத்தில் சமுதாயரீதியான செல்வாக்கும் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் வந்து சேரும் என்பதால் தேனி மாவட்டத்தில் மனைவி அனுராதாவைக் களமிறக்கலாமா என யோசித்து வருகிறார் தினகரன். அவர் களமிறங்கினால் ஆர்.கே.நகரைப் போல பணத்தை வாரியிறைத்து உறுதியாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்.
ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகளோ, எதிரில் பலமான கூட்டணிகளை அமைத்திருக்கிறார்கள். அவர்களும் பணத்தை இறைத்து வெற்றி பெற முயற்சிப்பார்கள். அனுராதாவைக் களமிறக்குவது சரியாக இருக்குமோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி அனுராதாவை வெற்றி பெற வைக்க முடியும் எனவும் திடமாக நம்புகிறார் தினகரன் என்கிறார்கள்.