`என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய முடிவு - ஓய்வை அறிவித்து இம்ரான் தாஹீர் உருக்கம்

சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அங்கு வாய்ப்பு கிடைக்காததால் தென் ஆப்ரிக்கவில் தஞ்சம் புகுந்து தென் ஆப்ரிக்க அணியின் வீரராக களமிறங்கினார். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன போதே இவருக்கு வயது 31ஆக இருந்தது. தற்போது இவருக்கு 39 வயது ஆகிறது. லேட்டாக கிரிக்கெட்டுக்கு வந்தாலும், குறுகிய காலத்தில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

தொடர்ந்து ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளிலும் ஆடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக களமிறங்கி வருகிறார். முன்னணி பந்து வீச்சாளராக இருந்தாலும் அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இதனால் அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார். போதாக்குறைக்கு வயது அதிகமாகிவிட்டது என்பதால் இவரது ஓய்வு குறித்து பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன. தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இலங்கை தொடருக்குப்பின் தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பையில்தான் விளையாட இருக்கிற நிலையில், இம்ரான் தாஹீர் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

அதன்படி, வரும் உலகக்கோப்பை தொடருக்குப் பின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், ``என்னால் இயன்ற அளவுக்கு விளையாட வேண்டும் என எண்ணினேன். ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். இப்போது நான் எடுத்துள்ள முடிவு என் வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவு. ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடக்கூடிய அளவுக்கு உடல்தகுதி ஒத்துழைக்கிறது. அதனால் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>