`பாஜக விசுவாசி ஆனால் எதிரியும்கூட - முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் மரணம்

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார். 68 வயதான இவர் கடந்த 1983-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து எம்எல்ஏ ஆனார். பின்னர் 1991-ம் ஆண்டு எம்.பி ஆனார். இதேபோல் 1998 ஆண்டும் எம்பியாக வெற்றிபெற்றவர் அப்போது மத்தியில் அமைந்த வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சியில், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். மங்களூரு தொகுதியில் இருந்து மட்டும் நான்கு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கொண்டவர். உள்ளூரில் செல்வாக்கில் இருந்தபோது அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை விமர்சித்து பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த சமயம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவில் இருந்து கர்நாடக ஜனதா கட்சியை துவங்கியபோது அக்கட்சியில் இணைந்து கொண்டார் தனஞ்செய் குமார்.

எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்தபோது இவரும் பாஜகவில் இணைய முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியில் இணைந்தவர் பின்னர் 2017-ம் ஆண்டு காங்கிரஸ் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனளிக்கத்தால் இன்று காலமானார். தற்போது அவரது உடல் காத்ரி கம்பாலா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

More News >>