`என் ஐடியாவை யாருமே கேட்பதில்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேதனை!
சிறுநீர் மூலம் உர இறக்குமதியை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அவ்வபோது சர்ச்சையான கருத்துகளை கூறி மக்களிடம் வறுத்தெடுக்கப்படுபவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ஏராளமான சர்ச்சை கருத்துக்கள் இவர் தெரிவித்து வந்திருக்கிறார். அந்த வகையில் கட்கரி தற்போது சிறுநீரை சேமித்து வைத்தால், யூரியா இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என யோசனை வழங்கி மறுபடியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற நிதின் கட்காரி, ``மனிதன் வெளியேற்றும் சிறுநீரில், யூரியா, அம்மோனியம் சல்பேட் அதிகம் உள்ளது. சிறுநீரை சேமித்து அவற்றிலிருந்து யூரியாவை பிரித்தெடுப்பதன் மூலம், அதிக அளவில் இயற்கை உரத்தை பெறலாம். விமான நிலையங்களில் சிறநீரை சேமிக்க வலியுறுத்தியுள்ளேன்.
நாம் உரங்களை இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் சிறுநீரைச் சேமிக்கும் பட்சத்தில், நாம் உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது, இதன் மூலம் எந்த இழப்பும் ஏற்பட போவதில்லை. என்னுடைய ஐடியாக்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக இருப்பதால் எனக்கு யாரும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம்கூட இதற்கு உதவுவதில்லை. அரசு ஊழியர்கள் பலரும் ஒரே திசையைப் பார்த்துச் செல்லும் காளைகள்போல பயிற்றுவிக்கப்படுகின்றனர்" என வருத்தம் தெரிவித்தார். முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தனது சிறுநீரை சேமித்து வைத்து, அதனை ஊற்றியே செடிகளை வளர்த்ததாக நிதின் கட்கரி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.