தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வையும் இந்த கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் நேற்று ஒரே நாளில் தி.மு.க. தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். ஆனாலும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.