இரட்லை இலை சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல் முறையீடு
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், இ பி எஸ் தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவு பட்டது. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம் .
பின்னர் இரு அணிகளும் இணைந்த பின் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இரட்டை இலை சின்னத்தை அதிமுக வசப்படுத்தினர். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றது.இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என உத்தரவிட்டு, தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.