அதிமுகவுடனான கூட்டணி உறுதியாகுமா? தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை
மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பின் அதிமுகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தலைமையில் இரு பெரும் மெகா கூட்டணி அமைவது உறுதியாகிவிட்டது. தேமுதிகவின் நிலைப்பாடு தான் கடைசி வரைக்கும் இழுபறியாக உள்ளது.
முதலில் அதிமுக கூட்டணியில் சேரும் முடிவில் பேச்சு நடத்திய தேமுதிக, கூடுதல் தொகுதிகள் கேட்டு முரண்டு பிடித்தது. திடீரென திமுகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்தது. தேமுதிகவின் ஏகப்பட்ட டிமாண்டுகளால் அதிர்ந்து போன திமுக தலைமை தேமுதிகவுக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட்டது.
மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும் சீட் பேரத்தில் தேமுதிக கறார் காட்டுவதாகவே தெரிகிறது. அதிமுக தரப்பில் 5 மக்களவை, ஒரு ராஜ்யசபா சீட் என இறங்கி வந்து, விஜயகாந்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் இந்த ஆலோசனை முடிவில் தேமுதிக நிலைப்பாடு உறுதியாகத் தெரிய வரும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.