திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுகவுடன் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணியில் இணைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.
கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மூத்த நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் சென்றனர். திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழுவினருடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பேச்சில் 2 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதன் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இருவரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். 21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம் என்றார்..