திமுக கூட்டணியில் 40 தொகுதிகளுக்கும் தொகுதிப் பங்கீடு நிறைவு திமுக 20 தொகுதிகளில் போட்டி - மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது என்றும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று மதிமுகவுடனான தொகுதி உடன்பாடு முடிவுற்ற பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதி உடன்பாடு முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் (10), விடுதலைச் சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றார் ஸ்டாலின் .

மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை தொகுதி ஒதுக்க இயலாத சூழ்நிலையை கூறி விட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, எங்களுடைய விருப்பத்தை, உணர்வுகளை தெரிவித்தோம். ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தனர் என்றார். விருதுநகரில் நாளை நடைபெறும் திமுக மாநாட்டுக்குப் பின் யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து முடிவெடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

More News >>