அவதூறு பரப்புகிறாரா பொன்னார்? உள்ளடியால் கலங்கும் தமிழிசை
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து நேரடியாகக் களமிறங்குவதில் தயக்கம் காட்டி வருகிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர்.தமிழிசை. இதன் எதிரொலியாக தென்சென்னையைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார்.
இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். அந்தத் தொகுதியில் சிட்டிங் எம்பியாக ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் இருக்கிறார் எனச் சொல்ல, அப்படிப் பார்த்தாலும் 37 தொகுதிகளிலும் உங்களுக்கு சிட்டிங் தொகுதிகள்தானே எனப் பதில் கூறியிருக்கிறார்கள்.
இந்த முறை எப்படியாவது வென்று டெல்லி செல்ல வேண்டும் என்பதால், மாநிலத் தலைவர் என்ற முறையில் விருப்பமான தொகுதியைப் பெறும் முடிவில் இருக்கிறார் தமிழிசை. அவருக்கு எதிராக கோஷ்டி வேலைகளைத் திறம்பட செய்து வரும் பொன்னார் அணியினரோ, தமிழிசைக்கு சிக்கல் கொடுக்கும் வகையில் எதாவது ஒரு தொகுதியில் தள்ளிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதைப் பற்றி அதிமுக தரப்பில் தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கிறார்கள். மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழிசைக்கு கேபினட் அந்தஸ்து கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் காரணமாம். அதனால்தான் தூத்துக்குடியில் தமிழிசை எனத் திட்டமிட்டே தகவல் பரப்பி வருவதாக ஆதங்கப்படுகிறார் தமிழிசை.
எனவே கடந்தமுறை வடசென்னையில் போட்டியிட்டது போல, இந்தமுறை தென்சென்னையிலேயே களமிறங்கலாம் என நினைக்கிறார். இதற்கு எதிராக ஆளும்கட்சி ஏதேனும் உள்ளடி வேலையைச் செய்தால், கொங்கு மண்டலத்தில் உள்ள பத்து சதவீத நாடார்களும் அதிமுகவுக்கு எதிரான நிலையை எடுப்பார்கள் எனக் காதுபடவே பேசுகிறார்கள் தமிழிசை கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.
-அருள் திலீபன்