மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 பயங்கரவாதிகள் கைது - பாகிஸ்தான் திடீர் நடவடிக்கை!

மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தான் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணம். இந்த தாக்குதல் மட்டுமல்ல நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம். இதனால் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே மசூத் அசாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் நன்றாக இருக்கிறார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் இதனை அந்நாடு கண்டுகொள்ளவே இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்த நெருக்கடி அதிகமானது. ஐ.நா உள்ளிட்ட சர்வேதேச அமைப்புகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ரவூப் மற்றும் ஹம்மாத் அசார் உள்பட தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை பாகிஸ்தான் அமைச்சரும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி ஷெஹ்ர்யார் அஃப்ரி, ``பயங்கரவாத இயக்கங்களை முடக்கும் நாடு தழுவிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதாகியுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் இன்னும் பலர் கைதாக வாய்ப்புகள் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

More News >>