உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மரணம்
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கை விசாரித்து, 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலை காலமானார்.
அலமேலு நடராஜன், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவரை, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு:
சாதி மறுப்பு திருமணம் செய்ததால், 2016-ஆம் ஆண்டு கவுசல்யாவின் கணவர் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த கவுசல்யா உயிர்பிழைத்தார். இதைத் தொடர்ந்து, கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க, கடந்த ஒன்றரை ஆண்டாக போராடிவந்தார் கவுசல்யா.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சின்னசாமிக்கு (கௌசல்யாவின் தந்தை) இரட்டை தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி அலமேலு நடராஜன். மேலும், சங்கரை வெட்டிக்கொன்ற கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 5 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை எழுதிய நீதிபதி அலமேலு நடராஜனின் கை இனி தீர்பு எழுதமுடிமல் ஓய்ந்துவிட்டது தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.