`கடைசி ஓவர் பரபரப்பு ஹீரோவான விஜய் சங்கர் - இரண்டாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மா, தவான் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவாக இழந்தாலும் கேப்டன் விராட் கோலியின் சாதனை சதத்தாலும், விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்டத்தாலும் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் திறம்பட பந்துவீசியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முன்னதாகவே இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 48.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா இணை சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு வந்த வீரர்கள் சொதப்பினர். இருப்பினும் ஹேண்ட்ஸ்கூம்ப், ஸ்டோனிஸ் இணை பொறுப்பாக விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை இருவரும் சமாளித்து ஆடினர். இதில் ஹேண்ட்ஸ்கூம்ப் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும் ஸ்டோனிஸ் பொறுப்பாக விளையாடி அரை சதம் கண்டார். அவர் கடைசி வரை நின்றதால் இந்திய அணியின் வெற்றி கேள்வி குறியாகவே இருந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட விஜய் சங்கர் பந்துவீசினார். முதல் பந்திலேயே ஸ்டோனிஸை அவுட் ஆக்கினார். இதன்பின் மூன்றாவது பந்தில் ஜம்பாவையும் அவர் அவுட் ஆக்க இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாக மாறியுள்ளது.

More News >>