ரஜினிகாந்த் பின்வாங்கவில்லை - விவேக்கின் அரசியல் பார்வை
''அரசியலில் ரஜினிகாந்த் பின் வாங்கவில்லை’’ என நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.கோவில்பட்டி அருகே உள்ள குருமலை என்னும் பகுதியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி, அலங்கார ஈஸ்வரி தாயார் கோயிலில் புதிதாக மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைத் திறந்து வைக்க நடிகர் விவேக் கோவில்பட்டி வந்திருந்தார்.
நிகழ்வுக்குப் பின்னர் விவேக் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தேர்தல்குறித்து பேசிய விவேக், ''எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் பொதுமக்கள் என்ற மகா சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம். ஆனால் முடிவு மக்கள் கையில்தான் இருக்கிறது.
ரஜினி தன் முடிவுகளிலிருந்து பின்வாங்கவில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்கப் போகிறேன் என தெளிவாகச் சொன்னார். அவர் முடிவில் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தல் முடிவைக் கணிக்க முடியவில்லை. இதுவும் ஸ்வாரஸ்யமாகதான் இருக்கிறது. உங்கள் அனைவரை போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.