`அரசியல்வாதிகள்தான் இதைச் செய்கின்றனர் - புல்வாமா தாக்குதல் குறித்து சித்தார்த் மீண்டும் டுவீட்
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ``தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் நிலையில், தீவிரவாதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இங்குள்ள கட்சிகளும், அமைப்புகளும் சந்தேகங்கள் எழுப்புவது வேதனை அளிக்கிறது. இது ஏன் எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார். இதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். இதனை டேக் செய்து நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதில், ``இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்" எனக் கூறியிருந்தார். இவரின் இந்த விமர்சனத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருந்தன. இந்தநிலையில் இதே விவகாரத்தில் மேலும் ஒரு பதிவை இட்டுள்ளார் சித்தார்த்.
அதில், ``ராணுவப்படையினர் பலி எண்ணிக்கையை கணக்கிடுவதில்லை. இந்திய ஊடகங்களும், இந்திய அரசியல்வாதிகளும்தான் இதைச் செய்கின்றனர். இவர்கள்தான் எண்ணிக்கை குறித்து சப்தமிடுகின்றனர். ராணுவத்தினரை நம்புங்கள். ஊடகங்களையோ, அரசியல்வாதியையோ நம்பாதீர்கள். தேசப்பற்றுடன் இருங்கள். கேள்விகள் கேளுங்கள், தெரிந்து கொள்வதற்கான தகுதி நமக்கு உண்டு. எந்த ஒரு தலைவரும் இதனை மறக்க அனுமதிக்காதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே சித்தார்த்தின் கருத்துக்கு பாஜக தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.