தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு... விஜயேந்திரருக்கு கண்டனம்
காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்துள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்த பிறகு வெவ்வேறுவிதமான மழுப்பலான பதில்கள் சங்கர மடத் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றன. இது ஏற்கத்தக்கதல்ல.
மடாதிபதிகளாக இருந்தால் அரசியல் சட்டம், தேசிய சின்னங்கள், மாநில மாண்புகள் இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக நடந்து கொள்வதும், அதை நியாயப்படுத்துவதும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. விஜயேந்திரரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.