மோடி பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக கொடிகள் திடீர் அகற்றம் .....அதிமுக கூட்டணியில் சேருமா ..? சேராதா..? - கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்

அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? சேராதா? என்ற சஸ்பென்ஸ் கடைசி நிமிடம் வரை நீடிக்கிறது. இன்று சென்னையில் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்காக கட்டப் பட்டிருந்த தேமுதிக கொடிகள் திடீரென அகற்றப்பட்டது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கூட்டணி முடிவை பிரதமர் மோடியின் சென்னை பொதுக் கூட்டத்துக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என தேமுதிகவுக்கு அதிமுக தரப்பு கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நேற்று கட்சியின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினாலும் முடிவை அறிவிக்கவில்லை.

இன்னும் பேரத்தில் கறார் காட்டும் தேமுதிக மீது அதிமுக, பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தாலும் எப்படியும் இன்றைக்குள் விஜயகாந்த் தரப்பில் முடிவை அறிவித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கட்சி நிர்வாகிகளை விஜயகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கூட்டணியில் தேமுதிக எப்படியும் இணைந்து விடும் என்ற நம்பிக்கையில் சென்னை வண்டலூரில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணி பொதுக் கூட்டத்திற்காக அதிமுக, பாஜக, பாமக கட்சிக் கொடிகளுடன் தேமுதிக கொடிகளும் பெருமளவில் நடப்பட்டிருந்தது. நேற்றிரவு திடீரென தேமுதிக கொடிகளை அதிமுகவினர் அகற்றியது பெரும் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணியில் தேமுதிக சேருமா? சேராதா? என்ற சஸ்பென்ஸ் கடைசி நிமிடம் வரை நீடிக்கிறது.

More News >>