சீனாவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - வாவ் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தை, சீனாவில் வெளியிடவிருக்கிறது லைகா நிறுவனம். முதற்கட்டமாக, சீனாவில் வெளியிடுவதற்காக டைட்டில் மற்றும் போஸ்டர்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2010ல் வெளியான ‘எந்திரன்’ படம் செம ஹிட். அந்த படத்தின் தொடர்ச்சியாக 2.0 திரைப்படம் கடந்த வருடம் நவம்பரில் வெளியானது. ரஜினியுடன் அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரோபோட்டிக் சயின்ஸ் சார்ந்த இந்தத் திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி 800 கோடிக்கும் மேல் வசூல் சாதனையும் படைத்தது. குறிப்பாக இந்தி டப்பிங் பதிப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
பொதுவாகவே இந்திய படங்களுக்கு சீனாவில் வரவேற்பே தனி. குறிப்பாக ரஜினி படங்கள் என்றால், தவறாமல் சீனாவில் டப் செய்து வெளியிடப்படும். அப்படி, ரஜினியின் 2.0வும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. சீனாவின் பீஜிங்கை சேர்ந்த மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனமான ஹெ.ஒய்.மீடியாவுடன் இணைந்து லைகா நிறுவனம் சீனாவில் படத்தை வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில், மொத்தம் 47,000 திரைகளில் 3டியில் படம் வெளியாகிறது. சீன பதிப்புக்கு ‘பாலிவுட் ரோபோட் 2.0: ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தவிர, சிட்டி ரோபோ பின்னணியில் இருக்க, 2.0 ரோபோ இடம் பெற்றிருக்கும் போஸ்டர் டைட்டிலுடன் தற்பொழுது வெளியாகி இணையத்தில் பரவலாகிவருகிறது. இந்தியாவில் வசூல் வேட்டை நடத்திய 2.0, சீனாவிலும் ஒரு சுற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.