மோடி பொதுக் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் - அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகிறது
காலை முதல் இழுபறியாக இருந்த தேமுதிக கூட்டணி நிலைப்பாடு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் மீண்டும் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
பிரதமர் மோடி இன்று மாலை பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் தேமுதிகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட இன்று காலை முதலே அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் அதிமுக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேமுதிக தரப்புடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்தார்.
தேமுதிக தரப்பிலோ கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாக, தேமுதிக நிர்வாகிகள் கொந்தளித்து கூட்டணியே வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம் என்று போர்க்கொடி உயர்த்தினராம். எதிர்ப்புக்குரல் வலுக்க எல்.கே.சுதீஷ் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.
மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் எல்.கே.சுதீஷ் நடத்திய கூட்டணி முடிவு இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் பின் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம் பெறத் துவங்கியது. இதனால் அதிமுக உடனான கூட்டணி அறிவிப்பு பிரதமர் மோடி முன்னிலையில் பொதுக் கூட்ட மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.