`கூட்டணி பேசினர் தொகுதிகள் இல்லை எனக் கூறிவிட்டேன் - துரைமுருகனை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்!
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே வெளிப்படையாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் தேமுதிகவினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கூட்டணி நிலைப்பாட்டில் தேமுதிக தடுமாறி வருகிறது. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் ஆரம்பம் முதலே இழுபறியில் இருந்து வந்தது. இதற்கிடையே, இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் விஜயகாந்த். பேச்சுவார்த்தை முடிவில் தேமுதிக செயலாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தார். அவரிடம் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால் பிரதமர் மோடி இன்று வண்டலூர் அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் புகைப்படமும் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தான் அதிமுகவுடன் கூட்டணி உடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கும், அதிர்ச்சியை கொடுத்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அப்போது,, ``எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர். எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன். அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது சுதீஷ் என்னுடன் போனில் பேசினார். ஸ்டாலின் ஊரில் இல்லை என்றும் எங்களிடம் கொடுப்பதற்கு தொகுதிகள் இல்லை என்றும் தெரிவித்துவிட்டேன். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம்" எனக் கூறினார்.
அதேநேரம் பியூஷ் கோயலை சந்தித்த பின் பேசிய சுதீஷ், கூட்டணி தொகுதி எண்ணிக்கை குறித்து பேசினோம்; பிரதமர் மோடி வருவதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோதுதான் துரைமுருகனுடன் பேசினேன்" என்று மறுப்பு தெரிவித்தார். தேமுதிகவின் இழுபறியால் தமிழக அரசியலில் குழப்பம் நீட்டித்து வருகிறது.