கனிமொழிக்கு ஆதரவு கொடுத்ததால் வந்த பரிசு! கொதித்த ஜவாஹிருல்லா
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதில் மிகுந்த சோர்வில் இருக்கிறார் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. திமுகவைவிட அதிமுக எவ்வளவோ மேல் என அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, ' 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்களை அதிமுக ஒதுக்கியது. இதில் இரண்டு இடங்களில் மமக வெற்றி பெற்றது. அதுவும் சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றோம்.
இந்த வெற்றிக்குப் பிறகு ஜவாஹிருல்லாவை முதலமைச்சருக்கு எதிரே முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஆனாலும் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு அதிக ஓட்டுக்கள் தேவையாக இருந்ததால், அதிமுக உறவை முறித்துக் கொண்டு கனிமொழிக்கு ஆதரவு கொடுத்தோம்.
இதனால் மாநிலங்களவைக்குத் தேர்வானார் கனிமொழி. இதன்பிறகு அடுத்து வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ஜவாஹிருல்லா. ஆனால் திமுக பொறுப்பாளர்கள் சரியாகத் தேர்தல் வேலை செய்யாததால் தோல்வியைத் தழுவினார்.
திமுகவுக்கு ஆதரவு கொடுத்ததால் கிடைத்த பரிசுதான் இந்தத் தோல்வி என அப்போதே நாங்கள் தெரிவித்தோம். இதன்பின்னரும் திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் தோள் கொடுத்தோம். இதையெல்லாம் உணராமல் பணம் இருக்கிறது என்ற காரணத்துக்காக வந்த பாரிவேந்தருக்கு வலியப் போய் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்கள். எங்கள் வலிமை என்ன என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்வார்' என்கிறார்கள் கொதிப்புடன்.