எங்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம் ஜி கே வாசன் கொதிப்பு
பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த மேடையில் ஜிகேவாசனுக்கும் சீட்டைப் போட்டு வைத்திருந்தனர் அதிமுகவினர். அவர் வராததால் கடைசி நேரத்தில் மேடையில் இருந்த அவரது படத்தையும் நீக்கிவிட்டனர். ' மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால்தான் அந்த மேடையைப் புறக்கணித்துவிட்டார் வாசன்' எனத் தகவல் பரவியது.
இதனை மறுக்கும் தமாகா பொறுப்பாளர்கள், மோடி இருக்கும் மேடையில் காங்கிரஸ் கொடியும் பறக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினார். ஆனால் எங்களை அழைத்து அதிகாரபூர்வமாக அவர்கள் பேசவில்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதைப் பற்றி மறைமுகப் பேச்சுவார்த்தைதான் நீடித்து வருகிறது.
மத்தியில் அமைச்சராகவும் ஒரு கட்சியின் தலைவராகவும் வாசன் இருக்கிறார். அவருக்கு எந்தவகையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை பாஜகவினரும் அதிமுகவினரும் உணர்ந்து கொள்ளவில்லை. ஒரு சீட், 2 சீட் வாங்கும் கட்சிகளை எல்லாம் மிகச் சாதாரணமாகப் பார்க்கின்றனர்.
டெல்டா மாவட்டத்திலும் விவசாயப் பெருங்குடிகள் மத்தியிலும் அபரிமிதமான செல்வாக்கைப் பெற்று வைத்திருக்கிறார் வாசன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வந்துவிட்டார். அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணியில் நின்றார் ஜிகேவாசன். இதையெல்லாம் ஆளும்கட்சி எப்படி எடுத்துக் கொள்கிறது எனவும் தெரியவில்லை.
விஜயகாந்துடன் இழுபறி நீடிப்பதால் எங்களிடம் பேச்சுவார்த்தையை முடிக்காமல் தள்ளிப் போடுகின்றனர். இதனால் இழப்பு அதிமுகவுக்குத்தான்' எனக் கொதிக்கிறார்கள்.