தமிழிசையோடு மோதும் எடப்பாடி! இருட்டடிப்பு செய்த பொன்னார்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி எனத் தலைப்பிட்டு பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது அதிமுக. இந்த விளம்பரங்களில் தமிழிசை படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், எடப்பாடி பழனிசாமியோடு தமிழிசை மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதுதான் என்கிறார்கள் பாஜக முகாமில்.
இதைப் பற்றிப் பேசும் தமிழிசை ஆதரவாளர்கள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்ததில் இருந்தே கொங்கு மணிகளுக்கும் தமிழிசைக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. திருப்பூர் அல்லது தென்சென்னையில் போட்டியிடலாம் என விரும்பினார் தமிழிசை. மாநிலத் தலைவர் என்ற முறையில் 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் தமிழிசை போட்டியிடலாம்.
இதன்மூலமாக அவர் வெற்றி பெற்று டெல்லிக்கு வந்துவிடக் கூடாது என பொன்னார் நினைத்தார். ஆளும்கட்சி புள்ளிகளிடம் தன்னுடைய கருத்தைக் கூறியிருந்தார் பொன்னார். இதன் பின்னணியில் தமிழிசைக்குப் பாதகமாக இருக்கக் கூடிய தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கிவிடலாம் என அதிமுக நினைத்தது. கனிமொழியை எதிர்த்து அவரால் உறுதியாக வெற்றி பெற முடியாது என்பதால், பொன்னாரும் இதை வலியுறுத்தினார். இந்த சதிவேலையை உணர்ந்து கொதிப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் தமிழிசை.
இதைப் பற்றி டெல்லி வட்டாரத்திலும் தெரிவித்துவிட்டார். ஏற்கெனவே, அத்வானி ஆதரவாளராக மோடி தன்னைப் பார்ப்பதால், தமிழிசையின் புகாரால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார் பொன்னார்.
இதன் விளைவாகத்தான் இன்று வெளியான பத்திரிகை விளம்பரத்தில் தன்னுடைய பெயரைப் போட வைத்து, தமிழிசையை இருட்டடிப்பு செய்துவிட்டார்' என்கிறார்கள்.