ஓவர் பில்டப் கொடுத்த தேமுதிக ...கடைசியில் மூக்குடைபட்டு நடுத்தெருவில் நின்ற கேவலம் - க்ளைமாக்சில் வில்லனாக வந்த துரைமுருகன்

தமிழக அரசியல் எத்தனையோ அதிரடி திருப்பங்களை பார்த்திருந்தாலும் இன்றைக்கு தேமுதிக நடத்திய அரசியல் காமெடி நாடகம் பல தலைமுறைக்கும் மறக்க முடியாதது போல் அமைந்து விட்டது. கைகொட்டி சிரிக்கும் அளவுக்கு தேமுதிக நடத்திய அரசியல் கூத்து திமுக பொருளாளர் துரைமுருகனால் அம்பலத்துக்கு வந்து அக்கட்சி நடுத்தெருவில் இப்போது நிற்கிறது.

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திமுக, அதிமுக தரப்பில் கடந்த 15 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டி விட்டது. திமுக கூட்டணிக் கணக்கை முடித்து விட்டது. தேமுதிக வந்தால் கூட்டணியை இறுதி செய்து விடலாம் என்று கணக்குப் போட்டது அதிமுக.

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் நடத்திய பேரங்களால் உச்சாணிக் கொம்பில் ஏறிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் எல்.கே.சுதீஷூம் ஏகப்பட்ட பில்டப் கொடுத்தனர்.திமுகவோ இது ஒத்து வராது என கழட்டி விட்டு விட்டது. அதிமுகவுக் கோ பாஜகவின் நெருக்கடியால் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம்.அதுவும் இன்று மாலை மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக தேமுதிகவுடனான கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.

அதிமுக தரப்பில் எவ்வளவோ இறங்கி வந்தும் போக்குக் காட்டிய தேமுதிக பேரத்தில் கடைசி வரை கறார் காட்டியது. நேரம் நெருங்க, நெருங்க அதிமுக தரப்பில் இது தான் இறுதிக் கணக்கு என்று 5 தொகுதிகளைத் தருவதாக உத்தரவாதம் தந்து கெஞ்சாத குறையாக அழைத்தது. ஆனால் அப்போதுதான் தேமுதிக நடத்திய நாடகம் சரியான திரைக்கதை இல்லாமல் காமெடியாகிப் போனது.

ஒரு பக்கம் எல்.கே.சுதீஷ் பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் கடைசிக் கட்ட பேச்சு நடத்தினார். மறுபக்கமோ தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அனகை முருகேசன் தலைமையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டுக் கதவைத் தட்டி கூட்டணிப் பேச்சை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

இங்கு தான் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட துரைமுருகன் தேமுதிகவுக்கு வில்லனாக மாறிவிட்டார். ரகசியமாக சந்திக்க வந்த தேமுதிகவினரை அம்பலத்துக்கு கொண்டு வந்து விட்டார். இந்தத் தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே சுதீஷூடன் நடத்திய பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு பிரதமர் மோடியை வரவேற்கச் சென்று விட்டனர்.

தொடர்ந்து பிரச்சார மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படமும் அவசர, அவசரமாக கழற்றப்பட்டு தேமுதிக இப்போது நடுத்தெருவில் நிற்கிறது.

More News >>