உன் சாப்பாட்டுல குருணைமருந்து கலந்திருக்காங்க அம்மா - பெற்றோரால் 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை
திருமணத்துக்கு மறுத்ததால் பெற்ற மகளையே விஷம் வைத்து பெற்றோர் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் குமார் - தனலட்சுமி. குமார் அந்தப் பகுதியில் மினி வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள், அருகில் உள்ள ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகள் தன்னுடன் பணிபுரிந்து வரும் டிரைவரை காதலிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனது மகளிடம் கேட்டுள்ளார் குமார். ஆனால் தான் யாரையும் காதலிக்கவில்லை என மறுத்துள்ளார் அச்சிறுமி. இந்த நிலையில் தான் சந்தேகம் விலகாமல் இருந்த குமார் மூத்த மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு விருப்பமில்லை, தான் படிக்க வேண்டும் எனக் கூறி பெற்றோர்கள் சொன்னத்துக்கு மறுப்பு தெரிவித்து அடம்பிடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரும், தனலட்சுமியும் சிறுமிக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து, பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
நீண்ட நாள்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கு புறப்படுமாறு மகளிடம் தனலட்சுமி கூறியுள்ளார். இதனால் அவரும் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது தாய் தனலட்சுமி மகளுக்கு மதிய உணவை டிபன் பாக்சில் வைத்துக் கொடுத்துள்ளார். சிறுமியும் உணவை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அதே பள்ளியில் படிக்கும் சிறுமியின் தங்கை, அக்கா மதிய உணவை நீ சாப்பிட வேண்டாம், அம்மா உன்னைக் கொல்ல மதிய உணவில் நெல் வயலுக்குப் போடும் குருணை மருந்து விஷத்தை கலந்து கொடுத்துள்ளதாக தெரிவிக்க சிறுமி உஷாரானார். உடனடியாக அந்த ஆசிரியர்களிடம் கொண்டு சென்றதுடன் அவர்கள் மூலம் மகேந்திர மங்கலம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர்கள் மீது புகார் அளித்துள்ளார் சிறுமி. சிறுமியின் புகார் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திருமணத்துக்கு மறுத்ததால் உணவில் விஷம் கலந்து மகளைக் கொல்ல முயன்றதை இருவரும் ஒப்புக்கொண்டதும் குமார் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.