பும்ராவின் அறிவுரையால் விக்கெட் எடுத்தேன் - விஜய் சங்கர் ஷேரிங்ஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக விளங்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட விஜய் சங்கர் பந்துவீசினார். முதல் பந்திலேயே ஸ்டோனிஸை அவுட் ஆக்கினார். இதன்பின் மூன்றாவது பந்தில் ஜம்பாவையும் அவர் அவுட் ஆக்க இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு உதவியதன் மூலம் ஓவர் நைட்டில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் விஜய் சங்கர்.
இது குறித்து அவர் பேசும்போது, ``முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், அந்த மோசமான நிலையில் இருந்து திரும்புவதற்கான வாய்ப்புதான் கடைசி ஓவர். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பந்து வீசும் வாய்ப்பிற்காக நான் காத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால், நான் சிறப்பாக பந்து வீசுவேன் என்றாலும், அவர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தப் போட்டியில் 43 அல்லது 44வது ஓவருக்குப் பிறகு நான் பந்துவீசுவேன் எனத் தெரியும். அதனால் சவாலுக்கு ரெடியாகவே இருந்தேன். எனக்குத் தெரியும் வெற்றிக்கு நான் வீசப்போகும் ஓவர் முக்கியம் என்று.
அநேகமாக அது கடைசி ஓவராக இருக்கலாம் என்பதால் நான் மனதளவில் ஏற்கெனவே தயாராக இருந்தேன். அதை அப்படியே செயல்படுத்தினேன். எனக்கு பும்ரா சில அறிவுரைகளை கூறினார். அவர் சொன்னது போலவே பந்துவீசினேன். விக்கெட் கிடைத்துவிட்டது. எனினும் வெற்றி குறித்து ஓவர் ரியாக்ட் செய்யக்கூடாது என எண்ணியிருந்தேன். காரணம் கடந்த வரும் நிதாஹஸ் டிராபியின் போது விமர்சனத்துக்கு உள்ளானேன். அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டேன்" எனக் கூறினார்.