எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதற்கு பிரதமர் மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்றும் மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காணொளி காட்சி மூலம் சென்னை அடையாறில் உள்ள ஜானகியம்மாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டியதற்கு நன்றி.அதே போல் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தலைவர் மு.கருணாநிதியின் பெயரை எழும்பூர் ரயில் முனையத்திற்கு சூட்ட வேண்டும் என வேண்டுகிறேன் என மு.க.அழகிரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.