நள்ளிரவு வரை நீடித்த தேமுதிக கூட்டணி பேச்சும் தோல்வி - கை விரித்து விட்டு டெல்லி பறந்தார் அமைச்சர் பியூஸ் கோயல்

தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக கடைசிக்கட்ட முயற்சிகளை நேற்றிரவும் தொடர்ந்தது. தேமுதிக தரப்பில் எல்.கே.சுதீஷூடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நள்ளிரவு வரை பேச்சு நடத்தியும் தேமுதிக கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடித்ததால் இழுபறி நீடித்தது. இதனால் வெறுப்பில் பியூஸ் கோயல் விமானம் ஏறி டெல்லி பறந்து விட்டார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக நேற்று நடத்திய நாடகத்தால் அதிமுக தரப்பில் அக்கட்சியை உதறித் தள்ளி தனிமைப்படுத்த முடிவு செய்து விட்டனர். ஆனாலும் பாஜக தரப்பில் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டு வந்தே தீர வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் இனிமேல் 4 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று அதிமுக தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டதாம்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு மீனம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 தொகுதிகளை ஏற்க தேமுதிக சம்மதிக்காததால் நள்ளிரவு வரைக்கும் இழுபறி நிலை நீடித்தது. கடைசியில் 4 தொகுதிகளுக்கு சம்மதித்தால் மீண்டும் பேசுவோம் என்று கைவிரித்துவிட்டு அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லி பறந்து விட்டார். இதனால் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை மட்டுமே ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு தேமுதிக பரிதாபமாக தவிக்கிறது.

More News >>