மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாகிறது - 21 சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை மே 16-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிக்க வேண்டும். அதன்படி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும், ஆலோசனைகளையும் நடத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014-ல் மார்ச் 5-ந் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. தற்போதும் உ.பி, பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மே.வங்கம் போன்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது தான் இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. தற்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23 அல்லது 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.