தமிழக அரசின் ரூ 2000 சிறப்பு நிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுகல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி கடந்த திங்கட்கிழமை இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ரூ 2000 சிறப்பு நிதி வழங்குவதற்காக எடுக்கப்பட்ட புள்ளி விபரம் தவறு என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக அரசுப் பணத்தை வாரியிறைப்பதா? என்றும் கூறி இத்திட்டத்திற்கு தடை விதிக்குமாறு விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று விசாரணை நடந்தது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்றும், தமிழக அரசின் புள்ளி விபரங்கள் சரியானது என்று வாதிட்டார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.