துத்துக்குடியில் தமிழிசை போட்டி உறுதி - கிராமம், கிராமமாக பிரச்சாரத்தை தொடங்கினார்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தற்போதே கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழிசைக்கு உறுதி எனத் தெரிகிறது. தென் சென்னைத் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்த தமிழிசைக்கு அதிமுக தரப்பில் பிடி கொடுக்கவில்லை. தற்போது சிட்டிங் எம்.பியாக உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்குத் தான் தென் சென்னை தொகுதி என அதிமுக தரப்பில் கண்டிப்பு காட்டி விட்டார்களாம்.
தூத்துக்குடியில் திமுக தரப்பில் கனிமொழி போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிட சரியான நட்சத்திர வேட்பாளர் நீங்கள் தான் எனக் கூறி அங்கு தான் போட்டியிட வேண்டும் என்றும் தெம்பு கொடுத்துள்ளனர்.மேலும் நீங்கள் சார்ந்த சமுதாய வாக்குகளும் நிறைந்த தொகுதி தூத்துக்குடி என்பதால் அங்கேயே போட்டியிடுங்கள் என்று பாஜக தலைமையும் உசுப்பேற்றிவிட வேறு வழியின்றி தமிழிசை சம்மதித்து விட்டதாகத் தெரிகிறது.
இதனால் பிரதமர் மோடி யின் சென்னை பொதுக் கூட்டம் முடிந்த அடுத்த நாளான இன்று காலை யாலேயே தூத்துக்குடிக்கு விமானம் ஏறிவிட்டார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ வைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராமங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்த தமிழிசை கிராமம், கிராமமாக பாஜக ஊழியர் கூட்டங்களைக் கூட்டி மைக் பிடிக்க ஆரம்பித்து விட்டார் தமிழிசை.
திமுக தரப்பில் தூத்துக்குடியை குறிவைத்து கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகளை செய்து வரும் கனிமொழி, திமுக நடத்திய கிராம சபைக் கூட்டங்கள் பலவற்றிலும் பங்கேற்றார். அத்துடன் தூத்துக்குடி தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் முதல் ஒன்றியச் செயலர்கள் வரை தேர்தல் செலவுக்கான முதல் கட்ட பட்டுவாடாவும் திமுக தரப்பில் ஜரூராக முடிந்து விட்டதாம்.
அதிமுக மற்றும் சமூக ஓட்டுக்களை நம்பி தூத்துக்குடியில் களமிறங்கும் தமிழிசை கனிமொழியின் வேகத்துக்கு ஈடு கொடுப்பாரா? தாமரையை மலரச் செய்து வெற்றிக்கனியை பறிப்பாரா? என்ற விவாதங்கள் இப்போதே தூத்துக்குடியில் கோடை கால அனலை விட சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.