காதலுக்கு இடையூறு - உப்புமாவில் விஷம் வைத்து பேராசிரியையை கொலை செய்த கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உப்புமாவில் விஷம் வைத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வெள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின். அருகில் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திவ்யாவும் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றுபவர் தான். நன்றாக இருவரது வாழ்க்கையும் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பெல்லார்மின் மனைவி திவ்யாவிடம் சென்று தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், தன்னை விட்டு பிரிந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் திவ்யா பிரிந்து செல்ல மறுத்ததால் அவருக்கு தொந்தரவுகளை கொடுக்க ஆரம்பித்துள்ளார் பெல்லார்மின். சமீபத்தில் பாதரசம் ஒன்றை கொடுத்து திவ்யாவை குடிக்கும்படி டார்ச்சர் செய்துள்ளார். ஆனால் மறுத்து அந்த பாதரசத்தை தட்டிவிட்டதில் அவரின் நகைகள் பாதிப்படைந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இருவரும் சில வாரங்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் பெற்றோர்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இதன்பின் திவ்யா மீண்டும் பெல்லார்மின்னுடன் வாழச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட பெல்லார்மின் நேற்று விஷம் கலந்த உப்புமா மற்றும் கூல்ட்ரிங்ஸை திவ்யாவுக்கு பாசமாக கொடுப்பது போல் கொடுத்துள்ளார். இதை அறியாத திவ்யா அதை வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். ரத்த வாந்தி வரவும் ஏதோ நடக்க போகிறது என்பதை உணர்ந்து கூச்சலிட்டுள்ளார் திவ்யா. ஆனால் அப்போது வீட்டில் இருந்த கணவர் பெல்லார்மின், அவரது பெற்றோர்கள் அவரின் கூச்சலை கண்டுகொள்ளாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதன்பின் திவ்யாவை 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து நடந்ததை விவரித்துள்ளார். அங்கு வந்த அம்புலன்ஸ் ஊழியர்கள் திவ்யாவை மீட்டு தக்கலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். நடந்த சம்பவம் திவ்யாவின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மீதம் இருந்த உப்புமாவை நாய்க்கு போட்டதில் வீட்டில் இருந்த நாயும் உயிரிழந்துள்ளது. போலீஸார் வீட்டில் இருந்த உணவுகளை கைப்பற்றி ஆய்வு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.