உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கங்குலி வெளியிட்ட இந்திய வீரர்களின் உத்தேசப் பட்டியல்
மே மாத இறுதியில் தொடங்க உள்ள உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணியில் யார் ? யார்? இடம் பெறுவார்கள் என்ற உத்தேசப் பட்டியலை முன்னாள் கேப்டன் கங்குலி வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகள் வரும் மே 30-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. போட்டிக்கு இன்னும் 83 நாட்கள் இருக்கும் நிலையில் உலகக் கோப்பை ஜுரம் கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் இப்போதே பற்றிக் கொண்டு விட்டது.
இந்திய அணியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என்ற விவாதமும் சூடாகியுள்ளது. உலகக் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அலசி ஆராய்ந்து இந்திய அணியில் யார் ? யார்? இடம் பெறுவார்கள், எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்பது குறித்த கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளிலேயே சிறந்த அணி இந்தியாதான். வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி பலமின்றி இருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் வருகையால் எழுச்சி பெறும். இருந்தாலும் கோப்பை வாய்ப்பு இந்தியாவுக்குத்தான் அதிகம் என்று கங்குலி தெரிவித்தார்.
இந்திய அணி பற்றி கங்குலி கூறுகையில், முகம்மது ஷமி, பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சில் கலக்கி வருகின்றனர். துணையாக புவனேஷ்வர், உமேஷ் யாதவ் கை கொடுக்கலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவுடன் தவான் தான் களமிறங்க வேண்டும். மாற்றுக்கு லோகேஷ் ராகுலை வைத்துக் கொள்ளலாம். 3-வது வீரராக கோஹ்லியும், நான்காவதாக அம்பதி ராயுடுவும், ஐந்தாவதாக தோனியும், ஆறாவதாக கேதார் ஜாதவும் களமிறங்குவது கட்டாயம். சமீபத்திய நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் திறமையை நிரூபித்து வரும் தமிழக வீரர் விஜய் சங்கர், கடைசியாக நாக்பூர் போட்டியில் சாதித்ததன் மூலம் உலகக் கோப்பையில் ஜடேஜாவை பின்தள்ளி ஆல் ரவுண்டர் இடத்தை உறுதி செய்துள்ளதாக கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
சுழலில் குல்தீப் யாதவ்/சகால் ஜோடிக்கு துணையாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறலாம் என்றும் கங்குலி கூறியுள்ளார்.
கங்குலி வெளியிட்ட 15 இந்திய வீரர்களின் உத்தேசப் பட்டியல் விபரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், விஜய்சங்கர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சகால், பும்ரா, முகம்மது சமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்