`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
திருப்பூரில் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கராஜ் - சுகன்யா. சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்றுமுன்தினம் பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகன்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதாக கூறி, சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி நேற்று காலை சுகன்யாவுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையை யாரும் பார்க்க விடாமல் தடுத்துள்ளார்கள்.
காரணம் கேட்டதற்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளதால் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது எனக் கூறி மருத்துவம் பார்த்துள்ளனர். பின்னர் இன்றும் குழந்தையை பார்க்கவிடவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் சென்று, நாங்கள் குழந்தையை கோயம்புத்தூர் கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துக்கொள்கிறோம் எனக் கூறியதற்கு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், கோவை வரை அழைத்துச் செல்வது சிரமம் எனக் கூறி மறுத்துள்ளார்.
மருத்துவர்கள் இப்படி கூறிய சில மணி நேரங்களில் குழந்தை இறந்துவிட்டது. இதை மருத்துவர்கள் கூறியதும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினார்கள். சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இறந்திருப்பதாகவும், எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றுகூறியும் இறந்த குழந்தையின் சடலத்தைப் பெற மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மருத்துவமனை பரபரப்புடன் காணப்படுகிறது.