`இலவசங்கள் கொடுக்கக்கூடாது இல்லனா குதிச்சுருவேன் - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
வந்தவாசியில் பாஜக பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் வந்தவாசி ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக உள்ளவர் பாதூரை சேர்ந்த ஜெய்சங்கர். இன்று இவர் கீழ்கொடுங்காலூர் கூட்டுசாலைக்கு வந்தவர் திடீரென அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினர். அதற்கு செவிமடுக்காத ஜெய்சங்கர் கீழே குதிக்க போவதாக தொடர்ந்து மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் ஜெய்சங்கரை கீழே வரும்படி அழைத்தனர். போலீசார் வந்தவுடன் கையில் வைத்திருந்த இரண்டு பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை கீழே வீசினார் ஜெய்சங்கர்.
அதில், ``அரசு அளிக்கும் இலவச பொருட்களோ அல்லது வாக்காளர்களுக்கு பணம் அளிக்கபடுவதாலே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியாது. 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண்கள் ஒட்டுனர் உள்ளிட்ட எந்த பணியில் இருந்தாலும் பணி நிரந்தரம் செய்வதுடன் அரசின் விதிப்படி அனைத்து பிடித்தங்களும் பிடித்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.350 கூலி தொகை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக கயிறை கட்டி இறக்கினர். அவரிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.