600 கோடி ஒப்பந்தப் பணிகள்! ஐஏஎஸ் அதிகாரி மீது பாயும் விஜயபாஸ்கர்
அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்தே மருத்துவத்துறையில் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். மருந்து கொள்முதல், கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள் என அனைத்து நிலைகளிலும் வெளிப்படையான ஊழல்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.
சுகாதாரத்துறை செயலராக ராதாகிருஷ்ணன் இருந்தவரையில் விஜயபாஸ்கரின் செயல்களுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை. தற்போதுள்ள செயலரும் எதையும் கண்டுகொள்வதில்லை. ஆனால் மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் சில ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்குவதில் மௌனம் காட்டி வருகிறார் ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்.
தலைமைச் செயலகத்தில் இருந்து எந்தக் கோப்புகள் சென்றாலும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியே நோட் போட்டு அனுப்பிவிடுவாராம் உமாநாத். இதனால் 600 கோடி ரூபாய் மதிப்பிலான விவகாரங்களுக்கு ஒப்புதல் கிடைக்காத கோபத்தில் இருக்கிறார் விஜயபாஸ்கர்.
இதன் எதிரொலியாக விரைவில் உமாநாத்தை வேறு பணியிடத்துக்கு மாறுதல் செய்யும் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். எந்தநேரத்திலும் மாறுதல் வரலாம் எனக் காத்திருக்கிறார் மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத்.