தற்செயலாக நடந்த விஷயமா அது?! கோபம் அடங்காத தமிழிசை ஆதரவாளர்கள்
பிரதமர் மோடி வந்துவிட்டுச் சென்ற பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தமிழிசையின் புகைப்படம், புறக்கணிக்கப்பட்டது குறித்துதான் விவாதம் நடந்து வருகிறது. '
பத்திரிகைகளில் படம் போடாமல் இருந்தது தற்செயலானதுதான்' என அதிமுகவினர் சமாதானம் பேசினாலும், 'சாதி அடிப்படையில் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள்' என தமிழிசை ஆதரவாளர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். இதைப் பற்றி கொதிப்புடன் பேசும் தமிழிசை தரப்பினர், ' மாநிலத் தலைவருக்கே தென்சென்னை தொகுதியைத் தரக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் சிலர் முடிவெடுத்துச் செயல்படுகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
தற்போதுள்ள சூழலில் தேமுதிகவும் இந்த அணிக்கு வராமல் போய்விட்டால், மேற்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தைத் தவிர மற்ற சமூகங்கள் எல்லாம் ஆளும்கட்சிக்கு எதிராகப் போய்விடும். தென்மண்டலத்தில் முக்குலத்தோர்களும் வடபுலத்தில் வன்னியர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்கு எதிரான நிலையை எடுக்கக் கூடிய சூழல் ஏற்படும். தென்சென்னையைத் தராமல் புறக்கணித்தால் தமிழகம் முழுக்க நாடார்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்' என சவால்விடுகின்றனர்.