யார் சொல்லி இப்படியெல்லாம் நடக்கிறது? கோபம் அடங்காத கே.சி.வீரமணி
சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி.
இதனால் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாகக் கட்சிக்காரர்கள் யாரும் தேர்தல் வேலை பார்க்க மாட்டார்கள் எனக் கருதியதால், வீரமணியை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள முதல்வர் பங்களாவில் நடந்த பேச்சுவார்த்தையில் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார் வீரமணி. ' பஸ் ஸ்டாண்ட் பக்கமுள்ள 300 கோடி மதிப்புள்ள நில விவகாரத்தில் அனைத்தும் சட்டப்படிதான் நடந்தது. என்னைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் வேலையை சிலர் செய்தனர்.
அவர்களது பேராசைக்கு உடன்படாததால் என் மீதே வழக்கு போட்டனர். இதில் என்ன நடந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள். அப்படியிருக்கும்போது என் வீட்டிலும் எனக்கு ஆதரவாக இருப்பவர்கள் வீட்டிலும் ஐ.டி ரெய்டு வந்தது ஏன். யார் சொல்லி இப்படியெல்லாம் நடக்கிறது. உங்களுடைய அனுமதியில்லாமல் மத்திய ஏஜென்சிகள் இப்படியெல்லாம் செய்வார்களா?' எனக் கோபப்பட்டிருக்கிறார்.
இதன்பின்னர் அவரிடம் சமாதானம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உங்கள் கோபம் புரிகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்துதான் சாதிக்க வேண்டும். சில விஷயங்கள் என்னையும் மீறித்தான் நடக்கின்றன. இனி இப்படியெல்லாம் நடக்காது. இந்தத் தேர்தலில் நம்முடைய பலத்தைக் காட்ட வேண்டும்' எனக் கூறி அனுப்பியிருக்கிறார். வேலூரில் ஏ.சி.சண்முகத்துக்கு எதிராகக் கடந்த தேர்தலில் ஓட்டு கேட்க வீரமணி, இந்தமுறை அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்கச் செல்வாரா என வேலூர் மாவட்ட அதிமுகவினர் பட்டிமன்றமே நடத்தி வருகிறார்கள்.