சொந்த ஊரில் தோனி விளையாடும் கடைசிப் போட்டி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இதுவே சொந்த ஊரில் இந்திய அணிக்காக தோனி விளையாடும் கடைசிப் போட்டியாக இருக்கும் என்பதால் அவரது அதிரடியை ரசிக்க ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் நடந்து முடிந்த முதல் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற உற்சாகத்தில் ராஞ்சியில் இன்று 3-வது போட்டியில் களம் காண்கிறது.
இன்று போட்டி நடைபெறும் ராஞ்சி கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊராகும். 37 வயதான தோனி வரும் உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப் படுத்துவது போல நேற்று முன்தினம் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் டின்னர் கொடுத்து உபசரித்தனர்.
இதனால் சொந்த ஊரில் தோனி விளையாடும் கடைசிப் போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தை ரசிக்கவும் சொந்த ஊர் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரைக் கைப்பற்றும் என்பதால் ஆஸ்திரேலியாவும் வெற்றிக்கு போராடும். இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.