துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்ற தேமுதிகவினர் எதிர்ப்பு காட்டிய திமுகவினர் - காட்பாடியில் பரபரப்பு
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்து காட்பாடியில் உள்ள அவருடைய வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றனர். பதிலடியாக திமுகவினரும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதனை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மறுத்ததுடன் அரசியல் நாகரீகம் இல்லாத துரைமுருகன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் துரைமுருகனுக்கும் தேமுதிகவினருக்கும் இடையே சொற்போர் நடந்து வருகிறது.
துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திடீரென கோஷங்களை எழுப்பி துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்றனர். ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தேமுதிகவினரை தடுத்தனர்.
இதையடுத்து துரைமுருகன் வீட்டின் முன் சாலையில் படுத்து தேமுதிகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தேமுதிகவினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு மோதல் உருவாகும் சூழல் உருவாகி பரபரப்பாக காணப்பட்டது.
இரு தரப்பினரையும் அமைதிப் படுத்திய போலீசார், துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினரை கைது செய்தனர்.