பாதுகாப்புத்துறை ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை நாட்டையா மோடி பாதுகாப்பார் என ஸ்டாலின் கேள்வி
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறையில் இருந்த ரபேல் போர் விமான ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை. பிறகு எப்படி அவர் நாட்டை பாதுகாப்பார் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி சனிக்கிழமை பேச்சு நடைபெறும். ஓரிரு நாளில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றார்.
மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு, ஆர். எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேமுதிக விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், அது குறித்து துரைமுருகன் விளக்கம் அளித்துவிட்டதால், தாம் பேச விரும்பவில்லை என்றார்.
பாதுகாப்புத்துறை வசமிருந்த ரபேல் விமான ஆவணங்கள் மாயமானது குறித்து அவர் கூறுகையில், மோடியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறையில் இருந்த ரபேல் ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை. பிறகு எப்படி அவர் நாட்டை பாதுகாப்பார் என்றார்.
முன்னதாக, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமைப்புகளுடன் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.