புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி, ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் ஆட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டி தொடங்கும் முன்பாக, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் அந்தஸ்தில் உள்ள விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளை வழங்கினார்.
இந்த தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடினர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவ தேசிய பாதுகாப்பு நிதி திரட்ட உதவும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.