6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை வசூல் வேட்டையில் ஈடுபட்டு கலக்கிய போலி எஸ்.ஐ சிக்கியுள்ளார்.
ஊட்டியைச் சேர்ந்தவர் அப்பாஸ். 33 வயதாகும் இவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பெண் எடுத்துள்ளார். இதனால் அம்பாசமுத்திரத்திலேயே மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே, நேற்று அம்பாசமுத்திரம் ரயில் பாதை அருகே சென்ற இசக்கிபாண்டியன் என்பவரின் லாரியை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். நீங்கள் யார் என்று கேட்டதற்கு இந்த ஏரியா எஸ்.ஐ என்று கூறியுள்ளார். இவரின் பேச்சில் சந்தேகமடைந்த இசக்கிபாண்டியன் அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனை தொடர்புகொண்டு விஷயத்தை கூறியுள்ளார். தகவல் கிடைத்ததும் அங்கு போலீஸார் அப்பாஸிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் போலி எஸ்.ஐ என்றும், போலி ஐடி கார்டு வைத்துக்கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர் போலீசார்.
அங்கு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 2012ம் ஆண்டு முதல் போலி ஐடி கார்டு வைத்துக்கொண்டு நிறைய இடங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும், போலீசாக உள்ள தனது உறவினர் ஒருவரின் உடையை திருடி ஊட்டி, நீலகிரி போன்ற இடங்களில் மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறியுள்ளார். வாக்கு மூலத்தை அடுத்து அப்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.