குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்: நடிகர் அரவிந்த் சாமி அதிரடி
சட்டம் - ஒழுங்கைப் பேண முடியாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று பத்மாவத் படத்திற்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றைச் சொல்லும், ‘பத்மாவத்’ படம், சங்-பரிவாரங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே, நாடு முழுவதும் வெளியாகி அமோக வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியாவதை மிரட்டி தடுத்துள்ள சங்-பரிவாரங்கள், ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமாஜ் உள்ளிட்ட சாதிய அமைப்புக்களைத் தூண்டிவிட்டு வன்முறையையும் அரங்கேற்றி வருகின்றன.
பத்மாவத் படத்திற்கு எதிரான சங்-பரிவாரங்கள் மற்றும் சாதிய அமைப்புக்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு, ஹிந்தி மற்றும் தமிழ்ச் சினிமா கலைஞர்கள் உட்பட பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, “இது மிகவும் அவமானத்துக்கு உரியது; இந்தக் குழந்தைகளுக்கும் பத்மாவத் படத்துக்கும் என்னதான் தொடர்பு? ஆனால், ராஜபுத்திரர்கள் ஏன் குழந்தைகளைத் தாக்குகின்றனர்? யாராவது எனக்கு இதை விளக்க முடியுமா? இது சரியா? தவறா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறையை குறிப்பிட்டு, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த் சாமி, “சட்டம் - ஒழுங்கைப் பேண முடியாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள். உங்களால் முடியவில்லையென்றால் அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாக சீர்கேட்டைத் தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” என்றும் பாஜகவை நேரடியாக அவர் தாக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றமே படத்தை வெளியிட தடையில்லை எனக் கூறிய பின்னரும் ஒரு திரைப்படத்தை முன்வைத்து சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் சச்சரவுகள் இனிமேல் வரவுள்ள மோசமான நிகழ்வுகளுக்கான அறிகுறியே;
யார் இந்த கலகக்காரர்கள்? அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்; இல்லாவிட்டால் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்; என்ன நடக்கிறது இங்கே? ஜனநாயகமா அல்லது குண்டர்கள் ஆட்சியா?” என்று சித்தார்த் ட்விட்டரில் காட்டமாக கூறியுள்ளார்.