`சொதப்பல் ஓப்பனிங் சூப்பர் கோலி - ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய பந்துவீச்சை நொறுக்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் சொதப்பியது. 4வது ஓவரின் போது தவான் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேற, ரோஹித் ஷர்மாவும் 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பாதி ராயுடுவும் 2 ரன்கள் எடுத்த கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாக, தோனி - கோலி இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடியது. பின்னர் தோனியும் 26 ரன்களில் அவுட் ஆனார். சொந்த ஊரில் விளையாடுவதால் தோனி நன்றாக ஆடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது சோகமாக முடிந்தது. இருப்பினும் மறுமுனையில் இருந்த கேப்டன் கோலி பொறுப்பான, விரைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 41 சதத்தை பூர்த்தி செய்தார். இதில் சேஸிங்கில் மட்டும் 25 சதங்களை அவர் அடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.
இருப்பினும் நன்றாக விளையாடி வந்த கோலி 123 ரன்கள் எடுத்தபோது ஜாம்பா பந்துவீச்சில் போல்டானார். இதன்பின் வந்த வீரர்களில் விஜய் சங்கர் 32 ரன்னில் வெளியேற இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 24 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்தியா 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சம்பா, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 2-1 என தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.